அல்லாஹ் எந்த வேததிற்கும்
வழங்காத ஓர் சிறப்பை திருக்குர்ஆனுக்கு வழங்கியுள்ளான் என்பதை நம்மில் ஒவ்வொருவரும்
இதன் வசனத்தை உன்னிப்பாக படித்து பார்க்கும்போது அறிய முடிகிறது. இந்த திருக்குர்ஆனில்
இறைவன் ஒவ்வொரு வசனத்தின் மூலமும் ஒரு கருத்தை மட்டுமல்லாது அந்த ஒரு வசனம் மூலம் பல்வேறு
கருத்துக்களை கூறுகிறான். இதனை இறைவனின் அடியார் மட்டுமே அறியமுடிகிறது. அவன் தனது
அந்த அடியாருக்கு மட்டுமே தனது அந்த நல்லடியான் மூலமாகவே இவ்வாறான ஞானமான விஷயத்தை
வெளிப்படுத்துகிறான். இவ்வாறாக, இறைவனின் அடியாராகிய, அவனது தீர்க்கதரிசியாகிய ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா
குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கிய திருக்குர்ஆன்
வேதத்தின் ஆழிய ஞானத்தை வழங்கியுள்ளான். இதில் ஓர் உதாரணத்தை நாம் கீழே காண்போம்:
திருக்குர்ஆனில் 88:18 வசனமாகிய أَفَلَا
يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ (பொருள்: அவர்கள்
ஒட்டகங்களை அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று பார்ப்பதில்லையா?) எனும் வசனத்திற்கு ஹஸ்ரத்
வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் இதன் ஆழமான, அழகிய, இறைஞானமிக்க விளக்கம் அளித்தவாறு
இவ்வாறு கூறுகின்றார்கள்:
“أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ (அஃபலா என்ளூரூன இலல் இபிலி கய்ஃப குளிகத்) என்ற இந்த (88:18)
வசனம் நுபுவ்வத் மற்றும் இமாமத் ஆகிய விஷயத்திற்கு தீர்வு காண்பதற்கு மிகவும் உதவியாக
இருக்கிறது. ஒட்டகத்திற்கென்று அரபியில் ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. அவற்றில்
இபில் என்று சொல்லை தேர்ந்தெடுத்ததில் என்ன இரகசியம் இருக்கிறது? “இலல் ஜமலி” என்று வந்திருக்கலாம் அல்லவா? “ஜமல்” என்பதும் ஒட்டகத்திற்காகத்தானே கூறப்படுகிறது? உண்மை என்னவென்றால், “ஜமல்” என்பதும்
ஒட்டகத்திற்கே கூறப்படுகிறது. ஆனால் “இபில்” என்பது பன்மை சொல்லாகும்.
இங்கு சமூகத்தை, ஒன்றுபட்ட நிலையைப் படம்பிடித்துக் காட்டுவது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தது; ஒட்டகம் என்பதற்காக பயன்படுத்தப்படும் ஜமல் என்ற சொல்லின் மூலமாக இந்த பயன்
கிடைக்க முடியாதிருந்தது. எனவே இபில் என்ற சொல்லை விரும்பினான். ஒட்டகங்களில் ஒன்றை
மற்றொன்று பின்பற்றுவதற்கான, கட்டுபடுவதற்கான ஆற்றல் இருக்கிறது.
பாருங்கள், ஒட்டகங்களின் ஒரு நீண்ட வரிசை இருக்கின்றது. அவை எவ்வாறு
அந்த ஓர் ஒட்டகதுக்கு பின்னால் ஒரு குறிப்பிட்ட முறையிலும் வேகத்திலும் செல்கின்றன!
மேலும் முன்னால் உள்ள ஒட்டகம் இமாமாகவும் பின்பற்றப்படக் கூடியதாகவும் இருக்கிறது.
அது அனுபவத்துள்ளதாகவும் பாதையை அறிந்ததாகவும் இருக்கிறது. பிறகு எல்லா ஒட்டகங்களும்
ஒன்றுக்கு பின்னால் ஒன்று சரிசமமான வேகத்துடன் செல்கின்றன. குதிரை போன்ற மற்ற விலங்குகளின்
உள்ளத்தில் இவ்வாறு பின்தொடர்ந்து செல்லும் விருப்பம் இருப்பதில்லை. ஆக, ஒட்டகத்தின் இயல்பில் இமாமைப் பின்பற்றும் விஷயம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு
விஷயமாகும். எனவே அல்லாஹ் “அஃபலா என்ளூரூன இலல் இபிலி” (அவர்கள் ஒட்டகங்களை – அவை எவ்வாறு
படைக்கப்பட்டுள்ளன என்று பார்ப்பதில்லையா?) எனக்கூறி அதன் ஒட்டுமொத்த
நிலையைச் சுட்டி காட்டியுள்ளான். ஒட்டகம் ஒரு வரிசைக்கிரமமாக சென்று கொண்டிருப்பதை
போன்று சமூக நிலையை மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு ஓர் இமாம் இருக்க வேண்டும்.
பிறகு இந்த வரிசை பயணத்தின்போது இருக்கிறது என்பதையும் நினைவிற் கொள்ள
வேண்டும்.
எனவே உலக பயணத்தை கடந்து செல்வதற்கும் இமாம் இல்லாத வரை மனிதன் தடுமாறி, தடுமாறி நாசமாகி விடுவான். இதில் சரியான முறையில்
வழிகாட்டிக் கொண்டிருப்பதற்கு ஓர் இமாம் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் ஒட்டகம்
அதிகமாக சுமையை எடுத்துச் செல்லக் கூடியதாகவும், அதிகமாக நடக்கக்
கூடியதாகவும் இருக்கிறது. இதிலிருந்து பொறுமை மற்றும் சகித்துக் கொள்ளும் படிப்பினை
கிடைக்கிறது. பிறகு ஒட்டகத்தின் சிறப்புப் பண்பு என்னவென்றால், நீண்ட பயணங்களில் பல நாட்களுக்கான தண்ணீரை அது சேமித்து வைக்கிறது. கவனமற்றதாக
இருப்பதில்லை. எனவே நம்பிக்கை கொண்டவர்களும் எல்லா நேரமும் தமது பயணத்திற்காக ஆயத்தமாகவும்
எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மேலும் மிகச் சிறந்த பயண உணவு இறையச்சமாகும்.
பிறகு “உன்லுர்” (பாருங்கள்) என்ற சொல்லிலிருந்து, இந்த பார்த்தல் என்பது குழந்தைகளைப் போன்று
பார்த்தல் என்பதல்ல. மாறாக, இதிலிருந்து பின்பற்றுதலுக்கான படிப்பினை
கிடைக்கிறது என்பது தெரிய வருகிறது. எவ்வாறு ஒட்டகத்தில் சமூக மற்றும் ஒற்றுமையின்
நிலை காணப்படுகிறதோ, அவற்றில் இமாமைப் பின்பற்றும் ஆற்றல் இருக்கிறதோ
அதே போன்று மனிதனும் இமாமைப் பின்பற்றுவதை தனது பண்பாகக் கொள்வது அவசியமாகும். ஏனெனில்
மனிதனுக்கு தொண்டு செய்யும் ஒட்டகங்களிடமும் இந்தப் பண்பு காணப்படுகிறது. ஆக, “கய்ஃப குளிகத்” (அவர்கள் ஒட்டகங்களை- அவை எவ்வாறு படைக்கபட்டுள்ளன என்பதை
பார்ப்பதில்லையா?) என்பதில் “இபில்” (ஒட்டகங்கள்)
என்பதன் ஒட்டுமொத்தமான நிலையிலிருந்து கிடைக்கும் அனைத்து பயன்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.”
(ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் மேற்கோளினை எடுத்துவைத்து
குத்பா உரையாற்றிய ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதகுல்லாஹு...) அவர்கள் 06.06.14
அன்று ஆற்றிய குத்பா உரையிலிருந்து)
ஆகவே, எந்த ஒரு சமுதாயமுமாக இருந்தாலும் சரியே அவர்களுக்கு
சரியான வழியை காட்டக்கூடிய ஓர் இமாம் உலக அளவில் இல்லை என்றால், அந்த சமுதாயம் வரிசையில் செல்லும் ஒட்டகங்கள் சிதைந்து சென்றுவிடுவதைப் போல்
சிதைந்து விடுகின்றன. தனது நோக்கத்தில் வெற்றி அடையாமல் தனது நிலைகளில் தடுமாறி, வழி தவறி சென்றுவிடுகின்றன.
இன்று அல்லாஹ்வின் அருளினால், உலக
அளவில் ஓர் இமாமுடன் ஓர் ஜமாஅத் தனது இறை பணியை செய்து வருகிறது என்றால் அது அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத் மட்டுமே ஆகும். இந்த இறை ஜமாஅத் ஓர் இமாமின் கீழ் இருந்தவாறு, கீழ்படிந்தவாறு தனது குறிக்கோள் மற்றும் வெற்றிகளின் பாதையை கடந்து கொண்டு
செல்கின்றது. இது அல்லாஹ்வின் அருளினாலே மட்டுமே முடியுமே அன்றி மனிதன் தனது சுயசிந்தனையாளும், செயலாலும் செய்துவிட முடியாது.
அல்லாஹ் இந்த முஸ்லிம் உம்மத்தினையும், மற்றும் உலகத்திலுள்ள பல்வேறு சமுதாயத்தினையும் ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்)
அவர்களை பின்பற்றியவாறு, அவர்கள் கொண்டு வந்த போதனையை கடைபிடித்தவாறு
ஓர் இமாமை பற்றி பிடித்து கொண்டு தனது வாழ்வின் நோக்கத்தை அடையக்கூடிய பாக்கியத்தை
நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.
No comments:
Post a Comment